ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை,  ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!,  கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்,  கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!.........

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - Navaliyoor Somasunthara Pulavar

 

Kamalam

Kamal

Families

Friends

Guiders

School

Jobs

கமலம்

கமல்

குடும்பம்

நண்பர்

வழிகாட்டி

பாடசாலை

தொழில்

 

 

Home

 

Jaffna

Valikamam

Vadamarachchy

Thenmarachchy

Islands

Northern Province

About

முகப்பு

 

யாழ்ப்பாணம்

வலிகாமம்

வடமாராட்சி

தென்மாராட்சி

தீவுகள்

வடமாகாணம்

நாங்கள்

 

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் -'தங்கத் தாத்தா'-  Navaliyoor Somasunthara Pulavar

"அஞ்சு முகத்தவர்

கொஞ்சி முகந்திடு
மாறு முகப் பதுமம்" 
 

       

என்று தனது 18வயதில்

முருகனைப் பாடியவர்

சோமசுந்தரப் புலவர்.

 

 

 

 

 

நவாலியூர்.சோமசுந்தரப்புலவர் இயற்றிய பாடல்கள்:

 

டிப் பிறப்புக்கு நாளை விடுதலை

 

 

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து

வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு

வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே

பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே

குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே

வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே

வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!


 

 

 

 

கத்தரி வெருளி

த்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நன்று
காவல் புரிகின்ற சேவகா!

மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்!

கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!

எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்! - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்!

வட்டமான பெரும் பூசனிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்! - தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!

கட்டியிறக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்! - இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!

தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!

கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!

பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ?

வாட்ட மில்லாப்ப்யிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே

கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே

நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே

ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்

ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே

தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்

சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்

சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்

அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.

 

பவளக்கொடி

வறிய சிறுமியொருத்தியின் கனவும், அது சிதைந்த விதமும் பற்றி சோமசுந்தரப் புலவர் எழுதிய பாடல்.

யாழ்ப்பாணத்தின் வடபகுதியில் இருப்பது பருத்தித்துறை (இலங்கையின் வடமுனையும் இதுதான்). அங்கே 'பவளக்கொடி' எனும் சிறுமியொருத்தி இருந்தாள். அவள் சந்தையில் பால்விற்று வருபவள். அரியமலர், அம்புசம், பூமணி, பொற்கொடி முதிலியோர் அவள் வயதொத்தவர்கள்.

ஒருநாள் பவளக்கொடி சந்தைக்குப் பால்கொண்டு போனாள். வழக்கம்போல பாற்பானையைத் தலையில் வைத்துக்கொண்டு சென்றாள். வழியில் தனக்கேயுரியபடி மனக்கோட்டை கட்டிக்கொண்டு சென்றாள். அவளின் கற்பனைக்கோட்டை எப்படியிருந்ததென்றும் இறுதியில் அது எப்படி இடிந்தது என்றும் பாடலிற் சொல்கிறார் புலவர்.

பவளக்கொடி

பருத்தித்துறை யூராம்
பவளக்கொடி பேராம்
பாவைதனை யொப்பாள்
பாலெடுத்து விற்பாள்
அங்கவட்கோர் நாளில்
அடுத்ததுயர் கேளிர்!
 

பாற்குடஞ் சுமந்து
பையப்பைய நடந்து
சந்தைக்குப் போம்போது
தான்நினைந்தாள் மாது:
"பாலையின்று விற்பேன்
காசைப்பையில் வைப்பேன்"

முருகரப்பா வீட்டில்
முட்டைவிற்பாள் பாட்டி
கோழிமுட்டை வாங்கிக்
குஞ்சுக்குவைப் பேனே


புள்ளிக்கோழிக் குஞ்சு
பொரிக்குமிரண் டைஞ்சு
குஞ்சுகள் வளர்ந்து
கோழியாகும் விரைந்து
விரந்துவளர்ந் திடுமே
வெள்ளைமுட்டை யிடுமே
 

முட்டைவிற்ற காசை
முழுதுமெடுத் தாசை
வண்ணச்சேலை சட்டை
மாதுளம்பூத் தொப்பி
வாசனை செருப்பு
வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட் டுடுத்து
மினுங்குதொப்பி தொடுத்துக்
கையிரண்டும் வீசிக்
கதைகள்பல பேசிச்
சுந்தரிபோல் நானே
கடைக்குப்போ வேனே


அரியமலர் பார்ப்பாள்
அம்புசமும் பார்ப்பாள்
பூமணியும் பார்ப்பாள்
பொற்கொடியும் பார்ப்பாள்

சரிகைச்சேலை பாரீர்
தாவணியைப் பாரீர்
வண்ணச்சட்டை பாரீர்
வடிவழகு பாரீர்
என்றுயாரும் புகழ்வர்
என்னையாரோ இகழ்வர்?

'பாரும்பாரும்' என்று
பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நமிர்ந்தாள்
தையலென்ன செய்வாள்?

பாலுமெல்லாம் போச்சு
பாற்குடமும் போச்சு
மிக்கதுய ரோடு
வீடுசென்றாள் மாது
**கைக்குவரு முன்னே
நெய்க்குவிலை பேசேல்.**

 

புலவரின்

கதிரமலைக் கர்ப்பூரவொளி பாடல்

அதிரவரு மாணிக்க கங்கை தனின் மூழ்கி
அன்பொடு சிவாயவென வருணீறு பூசி
முதிருமன் பானெஞ்ச முருகவிழி யருவி
முத்துதிர மெய்ப்புளக மூரவுரை குளறப்
புதியசெந் தமிழ்மாலை புகழ்மாலை சூடிப்
பொருவில்கந் தாசுகந் தாவென்று பாடிக்
கதிரமலை காணாத கண்ணென்ன கண்ணே
கர்ப்பூர வொளிகாணாக் கண்ணென்ன கண்ணே

விதிவரைந் திடுபழைய வினையோடி மாய
மிடிகொடும் பிணிசோக விதமான தேயு
மதியொடங் காரகன் முதலான கோளு
மருவிடும் பகையோடு மாறான நாளும்
அதிசுகந் தருஞான வழியான கூடும்
அளவிலன் பூறுமல மணுகாம லோடுங்
கதிரையென் றோதுமலை கண்டகண் கண்ணே
கர்ப்பூர மெய்ச்சோதி கண்டகண் கண்ணே.

 

         

'தங்கத் தாத்தா'

மே 251878  சூலை 101953 -

 

எங்கள் 'தங்கத் தாத்தா' நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ஈழத் திருநாட்டின் செய்யுளின் வரலாற்றுப் பாதையில் இருபதாம் நூற்றாண்டில் முன்னோடியாகத்திகழ்ந்தவர்.  அது மட்டுமல்ல ஈழத்தில் திளைத்த செய்யுள் இலக்கிய வரலாற்றில் பழமைக்கும் புதுமைக்கும் பாலமாகவும் அமைந்தவர்.

 

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்கு மே 251878ல் பிறந்தவர் சோமசுந்தரர். க. வேலுப்பிள்ளை இவருக்கு உடன் பிறந்தவர்.

 

28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார்.

 

அவர்களுக்கு இளமுருகனார்நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள்.

 

நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத்திறமையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார்.

 

இருபதாம் நூற்றாண்டுக்கு முந்திய மூன்று நூற்றாண்டுகளில் சமயமே இலக்கியத்தின் கருப்பொருளாகவும் தொனிப்பொருளாகவும் அமைந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் ஈழத்துச் செய்யுள் இலக்கியம், தேசியம், சமுகம் என்பனவற்றை முக்கிய கருப்பொருளாகக் கொண்டு புதிய யாப்புகளைத் தோற்றுவித்தன என்பதும் வரலாறு.

 

சோமசுந்தரப்புலவருக்கு ஐந்து வயதாகியபோது மானிப்பாய் அருணாசலப் புலவரைக்கொண்டு ஏடு தொடக்குவித்தனர். அருணாசலப்புலவரிடம் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், விரும்பித்தொழுவார் முதலிய நீதிநூற்களை கற்றுக்கொண்ட பின்னர் எண்கணிதமும் நிகண்டும் கற்றனர். புலவருடைய கல்வித்திறமையைக் கண்ட ஆசிரியர் குமரேசர் சதகம், தண்டலையார் சதகம் போன்ற சிறுநூற்களையும் கற்பித்தார். தமிழை மிகவிரும்பிக்கற்றுவருவதையறிந்து ஆங்கிலம் கற்பதும் எளிதாகும் என்றெண்ணி சோமசுந்தரப்புலவரை மானிப்பாயிலிருந்த மாரிமுத்து உபாத்தியாயர் வைத்து நடாத்திய ஆங்கில பாடசாலையில் சேர்த்து விட்டனர். அங்கு ஐந்தாண்டுகள் வரை ஆங்கிலம் கற்ற புலவர் எட்டாம் வகுப்பிற் சித்தியடைந்த பின்னர் நாவாலியூர் இராமலிங்க உபாத்தியாயரிடத்தே ஆசிரிய புகுமுகத் தேர்வு வரையும் ஆங்கிலம் கற்றனர். இராமலிங்க உபாத்தியாயரிடத்தே சிவஞானசித்தியார், இராமாயணம், கந்தபுராணம் போன்ற நூற்களையும் பாடங்கேட்டார்.

இராமலிங்க உபாத்தியாயரின் மகன் வைத்தியலிங்கமும் புலவரும் இணைபிரியாத நண்பர்கள். இருவரும் நெடுங்காலமாகத் தமிழ் நூற்களைக் கற்று நவாலியூரிலே சைவப்பிரசங்கமும் புராணபடனமும் நடாத்தி வந்தனர். புலவர் பதினைந்தாவது வயதிலேயே பாடல் எழுத தொடங்கி பதினெட்டிற் சிறந்த தமிழ்ப் பாடல்கள் யாக்கும் வன்மையைப் பெற்றுவிட்டார்.

அட்டகிரிப் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை என்பன புலவர் இளம்பராயத்தில் செய்த நூல்கள்.

ஆசிரியத்தொழிலே தமக்கு பெரிதும் இணக்கமான தென்று கண்ட புலவர், வட்டுக்கோட்டையிலுள்ள ஆசிரியர் சின்னத்துரை யென்பவரை யடுத்துச் சித்தன்கேணியைச் சார்ந்த கலட்டி யெனும் இடத்திலே ஓர் ஆங்கில பாடசாலையை தொடங்கி இருவருமாக நடாத்தி வந்தனர். அங்கே புலவர் ஆங்கிலம், தமிழ், இதிகாசம் என்னும் பாடங்களை செம்மையாகக் கற்பித்து வந்தனர். பெற்றோரும் பிள்ளைகளும் வித்தியாதரிசகரும் புலவரிடம் பெருமதிப்புக் கொண்டனர்

புலவருக்கு வறுமையும் பிணியும் பெரிதும் வந்து வருத்தின. வருத்தினாலும் சிறிதும் கலங்காது நாமகளிலும் முருகப்பெருமானிலும் பத்தி வைராக்கியங் கொண்டு, தமக்குற்ற வறுமையையும் பிணிகளையும் நீக்கி, நிலையான பேரின்ப பெருவாழ்வு பெறுதற்கு வழிகாட்ட வேண்டுமென்று குறையிரந்து பல்வேறு பிரபந்தங்களை பாடி வருவாராயினர்.

ஆண்டுதோறும் நவராத்திரி விரதம் பூண்டு அந்நாளிலே நாமகள் மேலும் முருகக்கடவுள் மேலும் புதிய புதிய வழிபாட்டு நூல்களை பாடி வந்தனர். ஏறத்தாள இரண்டாயிரத்து ஐந்நூறு செய்யுள்கள் அத்தெய்வங்கள் மேலனவாகப் பாடப்பட்டவை.

ஈழநாட்டிலுள்ள முருகன் திருத்தலங்கள் பலவற்றிற்கும் பாடல்கள் செய்திருக்கிறார் சோமசுந்தரப் புலவர். பெரும்பாலானவை பதிகமும் ஊஞ்சலுமாகவே யமைந்தவை.

நவாலியிலுள்ள அட்டகிரிப்பதியி லெழுந்தருளியிருக்கும் முருகக்கடவுள் மீது அட்டகிரிப் பதிகமும், அட்டகிரிக் கலம்பகமும், அட்டகிரி வெண்பாவும், பிள்ளைத் தமிழும் பாடினார். நல்லை முருகன் மீது திருப்புகழும் அந்தாதியும் பதிகமும் பாடினார்.

கதிரை வேலவர் மேலதாகப் பதிகமும் சிலேடை வெண்பாவும் பாடினார். கந்தவனம் என்னும் பதியிற் கோயில் கொண்ட முருகன்மேற் பதிகமும் திருப்பள்ளியெழுச்சியும் நான்மணிமாலையும் பாடினார்.

இதைவிடவும் உயிரிளங்குமாரன் நாடகம், இலங்கை வளம், தால விலாசம், கந்தபுராணவுண்மை நூற்பொருள் முதலிய நூல்களையும் புலவர் அவர்கள் செய்திருக்கிறார்கள்.

                    

சமகாலப் புலவர்களை விஞ்சியவர்

இருபதாம் நூற்றாண்டில் பல புலவர்கள் ஈழத்தில் வாழ்ந்தனர். அவர்களில்  சுன்னாகத்தைச் சேர்ந்த 

குமாரசாமிப் புலவர்,

 

வறுத்தலை விளானைச் சேர்ந்த   

மயில்வாகனப் புலவர்,

 

வட்டுக்கோட்டை

பண்டிதர் மு. நல்லதம்பிப் புலவர்

தற்போது நடைமுறையிலுள்ள 'ஸ்ரீ லங்கா மாதா (ஸ்ரீ லங்கா தாயே)' என்று ஆரம்பிக்கும் தேசிய கீதம் ஆனந்த சமரக்கோனினால் 1940களில் எழுதப்பட்டாலும், 1950ஆம் ஆண்டே இலங்கை அரசினால் அங்கிகரிக்கப்பட்டது. அதனை, புலவர் மு.நல்லதம்பி 1950ஆம் ஆண்டு தமிழில் மொழிபெயர்த்தார்.

 

ஆகியோருடன் ஒப்பிடும் பொழுது சோமசுந்தரப் புலவரே இருபதாம் நூற்றாண்டு காலத்தில் சமயத்தை பொருளாகக் கொண்ட அதிகமான பிரபந்த இலக்கியங்களைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

 

 

 

சோமசுந்தரப் புலவர்
சமைத்த பிரபந்தங்கள்

தனது காலத்தில் வாழ்ந்த புலவர்களைப் போன்று

   பதிகம்',

   'ஊஞ்சல்'

என்றும் இரண்டு பிரபந்தங்களியும் பாடிய சோமசுந்தரப் புலவர்    'கலம்பகம்',

   'நான்மணி மாலை',

   'அட்டகம்',

   அந்தாதி', '

   'சிலேடை வெண்பா',

   'திருப்பள்ளியெழுச்சி'

ஆகிய பிரபந்தங்களையும் பாடிய பெருமைகுமுரியவராவார்.

தலங்களை மையமாக வைத்துப் பாடிய பிரப்ந்தங்களில்

    'அட்டகிமுக் கலம்பகம்',

    'தில்லை அந்தாதி',

    'கதிரைச் சிலேடை வெண்பா'

போன்ற இலக்கியங்களின் சிறப்பு என்றும் ஓங்கி நிற்கக் கூடியவை எனலாம்.

 


கதிர்காமம் பற்றிய பாடல்கள்


இவர் பாடிய கதிரைச் சிலேடை வெண்பாவில் ஒவ்வொரு வெண்பாவின் முதல் இரண்டடிகளும் கதிர்காமத்தின் சிறப்பினைச் சிலேடை நயத்தினை கூறுகின்றன. கதிர்காமத்தில் காணக்கூடிய அலங்காரக் காட்சிகள் யாவற்றையும் எளிய நடையிலும் சிலேடைகள் மூலமும் விளக்கியுள்ளார்.
           "நிம்டதுறை பேடகமு நில்லாவினென் விளங்குங்
            பமா வெறுங் கதிரையே"

என்னும் பாடலால் முருகக் கடவுள் உறையும் பேடகம் யானை மேல் ஏற்றி வீதி வலம் வருதலையும் அங்கே தினை மாவிளக்குகளின் தன்மையையும் வர்ணித்துள்ளமை மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

நாமகள் துணை கொண்டு பாடியவர்

நாமகள் துணை கொண்டு பாடல்கள் இயற்றிய சோமசுந்தரப் புலவர் நாமகளின் சிறப்பினை எடுத்து ஓதிய பாடல்களை "நாமகள் புகழ் மாலை"யில் காணலாம்.

 

'கம்மனை கும்மி', 'பதி பசு பாச விளக்கச் செய்யுள்' நூல்களும் சைவ சித்தாந்தங்களை விளக்குவதாக ஆக்கப்பட்டுள்ளன.

 

மேலும் அவர் எழுதிய கந்த புராணக் கதைகளும் சைவ சமயத்தின் உள் கருத்துக்களை தெளிவு படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

 

இவர் ஆக்கிய 'உயிரிளங்குமரன்' நாடகம் மூலம் சமூகத்தில் தேங்கிக் கிடக்கும் சமூக குறைபாடுகளை எடுத்து இயம்பியுள்ளமை புலவரின் துணிச்சலை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

ஈழத்து மக்களின் மொழி பேணப்படல் வேண்டும் என்று முழக்கம் செய்தவர்

நமது நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேசிய விழிப்புணர்வை உருவாக்க இவர் பாடல்கள் ஏதுவாக்கப்பட்டமை வியக்கத்தக்கதொன்றாகும்.

 

'உயிரிளங்குமரன்' நாடகத்தில் கமத்தொழில், நெசவுத் தொழில் என்பனவற்றை மக்கள் அலட்சியம் செய்தமையை எடுத்துக்காட்டியும் அத்தொழில்களின் சிறப்பினையும் சுட்டிக் காட்டியதனால் மக்களிடையே மறுமலர்ச்சி ஏற்பட்டது.


புலவர் இயற்றிய குழந்தைப்பாடல்கள் பல. இப்பாடல்கள் மூலம் ஈழத்துச் செய்யுள் இலக்கிய வரலாற்றில் தாம் பெற்ற திறமைய வலுப்படுத்தியுள்ளார்.

சிறந்த குழந்தைப் பாடல்கள் இயற்றுவதில் தமிழகத்தில் முன்னோடியாக விளங்கிய கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை போன்று ஈழத்திலும் சோமசுந்தரப்புலவர் முதன்மை பெற்றுள்ளார் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக!


மூலம்: வீரகேசரி

 

 

தாடியறுந்த வேடன்

சோமசுந்தரப் புலவரைத் 'தங்கத் தாத்தா'

என்று செல்லமாக அழைப்பதுண்டு.

தாத்தா வென்றால் தாடியில்லாமலா?

இவருக்கும வெண்பஞ்சுபோல

வெள்ளைத்தாடி இருந்ததாம். இவர் தாடி

பற்றியும் ஒரு பாட்டெழுதியுள்ளார்.

அது "தாடியறுந்த வேடன்".

தன் தாடிக்கு இப்படி நடந்தால் எப்படியிருக்கு

மென்று நினைத்தோ உண்மையிலேயே

அவர்தாடிக்கு வந்த ஆபத்தை வைத்தோ

இப்பாடலை அவர் எழுதியிருக்கக்கூடும்.

நாயை வைத்து வேட்டையாடும் ஒருவன்

ஒருநாள் அணில் வேட்டைக்கு தன் நாயுடன்

போகிறான். அதில் அவன் தாடி அறுந்து விட்டது.

எப்படி அறுந்ததென்று 'தங்கத் தாத்தா' சொல்கிறார்

 

 

வீமா! வீமா! ஓடி வாவா - அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி


மரத்தில் இருந்து குதித்தே - அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?


பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.

 

இலவு காத்த கிளி

செந்தீயின் நாப்போலச் செழுந்தளிர்க ளீன்று
திருமாலின் நிறம்போலப் பசியதழை *பொதுளி
நந்தாத நெடுந்தெருப்போற் கிளைகள்பல வோச்சி
நடுக்கட்டி லோரிலவ மரம்வளர்ந்த தன்றே


மஞ்சுதொட வளர்ந்துவந்த விலவமர மதனில்
மரகதமா மணிபோலப் பசுமைநிறம் வாய்ந்த
கொஞ்சுமொழிக் கிஞ்சுகவா யஞ்சுகமொன் றினதே
குடியிருந்து நெடுநாளாய் வாழ்ந்துவந்த தன்றே


அங்கொருநா ளிலவமர மரும்புகட்டக் கண்டே
அலராகிப் பிஞ்சாகிக் காயாகிக் கனியும்
இங்கிதனைக் கவ்வியெடுத் தென்காலே கரமாய்
ஏந்திமகிழ்ந் தேபுசிப்பே னெனநினைந்த தன்றே


காலையிலே யெழுந்துசெயுங் கடமைகளை முடித்தே
கடவுளடி கைதொழுது கதிரெடுக்கப் போகும்
மாலையிலே திரும்பிவந்து மற்றதனைப் பார்த்து
வாயூறிக் கனியாக வரட்டுமென மகிழும்


எண்ணுமலர் பிஞ்சாகிக் காயாகித் தூங்க
இனியென்ன பழுத்துவிடு மெடுத்துண்பே னென்றே
கண்ணையிமை காப்பதுபோல் நாடோறும் நம்பிக்
காத்துவந்த திரவுபகல் காதலித்துக் கிளியே


வறியதொரு மகன் குதிரைப் பந்தயத்திற் காசு
வந்துவிழும் வந்துவிழு மென்று மகிழ்வாக
பிறிதுநினை வொன்றுமின்றி யாசைமிகு கிள்ளைப்
பிள்ளைமகிழ்ந் திருந்ததங்கே பேணியதைப் பார்த்தே


நன்றுவரும் பழமெடுத்து நானுமின சனமும்
நயந்துவிருந் தருந்துகின்ற நல்லபெருந் திருநாள்
என்றுவரு மின்றுவரும் நாளைவரு மென்றே
எண்ணியிருந் ததுமலடு கறக்கவெண்ணு வார்போல்


பச்சைநிறம் மாறியந்தப் பழம்பழுத்த போது
பைந்தார்ச்செம் பவளவிதழ்ப் பசுங்கிளியும் பார்த்தே
இச்சையுடன் தன்னுடைய வினசனத்துக் கெல்லாம்
என்வீட்டிற் பழவிருந்து நாளையென வியம்பி


துஞ்சாது விழித்திருந்தே யதிகாலை யெழுந்து
சொல்லிவைத் தோரையுங் கூட்டிவரும் போது
பஞ்சாகிக் காற்றுடனே பறந்ததுவே வெடித்துப்
பைங்கிளியார் போற்றிவந்த முள்ளிலவம் பழமே

அந்தோவக் கிளியடைந்த மனவருத்தமெல்லாம்
அளவிட்டுச் சொல்லமுடி யாதுவிருந்த தாக
வந்தகிளை மிகநாணி வெறுவயிற்றி னோடு
வந்தவழி மீண்டதுவே சிந்தைபிறி தாகி


உள்ளீடு சிறிதுமில்லாப் பதர்க்குவையை நெல்லென்
றுரலிட்டுக் குத்தவெறு முமியான வாபோல்
இல்லாத பயன்விரும்பி ஏமாந்த பேரை
இலவுகாத் திட்டகிளி யென்பருல கோரே.

 

இலவு காத்த கிளி

ஒன்றுக்காகக் காத்திருந்து ஏமாந்துபோகும் சந்தர்ப்பத்தைக் குறிக்க இச்சொற்றொடர் பயன்படுத்தப்படுவதுண்டு. சிலர் 'இழவு காத்த கிளி' என்றும் எழுதுவர். ஆனாற் பெரும்பான்மையானோர் இச்சொற்றொடர் உச்சரிப்பில் 'இளவு' என்றே உச்சரிக்கின்றனர்.

இச்சொற்றொடர் உணர்த்தும் கதையைப் பார்ப்போம்.

கிளியொன்று இலவமரத்திற் குடியிருந்தது. ஒருநாள் அம்மரத்தில் அரும்பு கட்டியது. அதைப்பார்த்த கிளி, 'இது பூவாகி, பிஞ்சாகி, காயாகி, பின் கனியாகும்போது இதை உண்பேன்' என்று தனக்குட் சொல்லிக் கொண்டது. தனக்குள்ளேயே அதை உண்பது தொடர்பான ஆசையை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டது. ஒருநாள் அந்த இலவங்காய் நிறம்மாறிப் பழுக்கத் தொடங்கியது. உடனே கிளி, தன் இனசனத்துக்கெல்லாம் சொல்லி வரவழைத்து பெரிய விருந்து கொண்டாட நினைத்தது. அதன்படி அழைப்பும் அனுப்பிவிட்டுக் காத்திருந்தது. இனசனமும் வந்தது. பழத்தை உண்ணும் கனவிலிருந்த கிளிக்கு பேரிடி விழுந்தது. இலவம் பழம் வெடித்து, பஞ்சு பறந்தது. கிளி மட்டுமன்றி அதன் இனசனமும் ஏமாற்றமடைந்தது.


தங்கத் தாத்தா சோமசுந்தரப் புலவர், இலவு காத்த கிளியைப் பாட்டிற் சொல்லியிருக்கிறார்.


நூல்கள்

 • கந்தபுராணக் கதைகளும் அவை உணர்த்தும் உண்மைநூற் கருத்தும்
 • கந்தவனக் கடவை நான்மணிமாலை
 • சாவித்திரி கதை ( உரைநடை நூல் )
 • கந்தபுராண நுண்பொருள் விளக்கம் ( சைவாங்கில வித்தியாசாலை வெளியீடு )
 • தந்தையார் பதிற்றுப்பத்து
 • நல்லை முருகன் திருப்புகழ்
 • நல்லையந்தாதி
 • அருணாசலந்துரை சரித்திரச் சுருக்கம்
 • சுகாதாரக் கும்மி ( சைவபரிபாலன சபையார் பதிப்பு )
 • சூரியவழிபாடு
 • மருதடி விநாயகர் பாமாலை
 • கந்தவனநாதர் திருப்பள்ளியெழுச்சி
 • அட்டகிரிப் பதிகம்
 • கல்லுண்டாய் வைரவர் பதிகம்
 • கதிரைமலை வேலவர் பதிகம்
 • செந்தமிழ்ச் செல்வியாற்றுப்படை
 • சிறுவர் பாடல்கள்

நாடகங்கள்

 • உயிரிளங்குமரன்

1925ஆம் ஆண்டு, உயிரிளங்குமரன் என்னும் நாடகத்தைப் புலவர் எழுதி நடிப்பித்தார்.

 

அந்த நாடகத்தின் அருமை பெருமைகளை அறிந்த இலங்கைத் தமிழ்ப் புலவர்கள் புலவர் என்னும் பட்டத்தை அவருக்கு அளித்தனர்.

 

இவர் ஆடிப்பிறப்பு, கத்தரி வெருளி, முதலிய பாடல்களைப் பாடிப் பரிசும் முதன்மையும் பெற்றார். தங்கத்தாத்தா என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு உண்டு. புலவருடைய தந்தையார் இறந்தபோது அவர் நினைப்புக்குத் தந்தையார் பதிற்றுப் பத்து என்னும் விழுமிய நூலை எழுதினார்.

 

 

 

நவாலி

ஒன்பது ஆலயங்களைக் கொண்ட மைந்ததை நவஆலயங்கள் என்போம்.

 

நவாலயம் எனத்திரிபடைந்து நவாலி என மருவியதிலிருந்தே, நவாலி என்ற ஊர்ப்பெயர் உருவானதாக கிராமத்திலுள்ள வயதில் மூத்தவர்கள் சொன்னார்கள்.

  

சிவன்கோவில்,

காத்தவராயன் கோவில்,

கல்லுண்டா வைரவர் கோவில், குளத்து வைரவர் கோவில், கைளையோடை அம்மன்கோவில், குருக்கள் கோவில்,

ராஜராஜேஸ்வரி கோவில்,

சம்பந்தப் பிள்ளையார் கோவில், முருகனார் கோவில்

 

ஆகியவையே அந்த ஒன்பது ஆலயங்களுமாகும். நவாலி என்ற ஊரில் இந்த ஒன்பது ஆலயங்களும் இன்றும் சிறப்புடன் மரபுகள் மாறாமல் பூஜைபுனஸ்காரங்களுடன் உயிர்ப்புடன் திகழ்கின்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

வறுத்தலை விளான்  

மயில்வாகனப் புலவர்

 

 

வட்டுக்கோட்டை

பண்டிதர் மு.

நல்லதம்பிப் புலவ