"நன்னீஸ்"
மானியம்பதி அமரர் திருமதி.கதிரவேலு நன்னிப்பிள்ளையின்
சிவபதப் பேறு குறித்த நினைவு மலர்

 

சிவப்பேறு

பிறந்த வாண்டு பிரம்மதிச சித்திரையில்
சிறந்த தினமாம் சனியதனில் – சிறப்புமிகு
சீலமகள் நன்னிப்பிள்ளை சீரடியான்
பாதமலர் அடைந்த தினம்.

நன்னீஸ் வம்ச வரலாறு

ஆசிரியப்பா

சீர்மலி யுலகின் சிரமென விளங்கும்
ஏர்மலி ஈழ மெனுந் திருநாட்டில்
பன்னாட் டவர்களும் பார்மிசை போற்றிட
என்னாட் டிலுமிலா வளம்பல மலிந்திடும்
தினம்தின முழைத்திடு திண்ணிய வுழவரும்
மனமிசை தீதே நினையா மனிதரும்
கல்வியில் சிறந்திடு கற்றறி வாளரும்
சொற் றிறம்பிடா செயற்படு தீரரும்
நாற்றிசை யெங்கணும் சிறந்து விளங்கிடும்
கற்பக தருவெனும் பனைகள் நிறைந்திடும்
நற்றமிழ் விளங்கிடும் யாழ்ப்பாணந் தனிலே

சீரிய முத்தெனச் சிறந்து விளங்கிடும்
விக்கினம் விலக்கிடும் மருதடி விநாயகன்
விருப்புடன் வீற்றிடு மானிப் பாயிலே
வட பாலமைந்து தனிச் சிறப் பெய்திடும்
சங்கத் தமிழ் வளர் உச்சியோடையிலே
அப்பனருளால் அறம் பல புரிந்து
அவ னருளாலே காலனை வென்று
பெருந்தவம் புரிந்து புகழ்பல பெற்றோன்
வள்ள லென்றழைத்திடு வையிரவப் பெரியோன்
இன் முகம் காட்டி இனியசொல் பேசிடும்
நன் மகளான இலக்குமியாரைத்
துணைவியாய்ப் பெற்று இல்லறம் புகுந்தனன்.

திசையெலாம் சிறக்க பழுதிலா வாழ்வு
பாங்குறப் பெற்று
பாரோர் போற்றிட பயந்த பிள்ளைகள்
செல்லையா சண்முக மெனவிரு புதல்வரும்
புதல்வியர் முத்தாச்சி நன்னி மாணிக்கம்
சூழ்ந்து வாழ்வை இனிது நடத்தினர்.

இத்தரை ஏற்ற இருந்திடு காலையில்
உற்றார் உறவினர் உவந்திருமாறு
முத் தென இலங்கும் முத்தாச்சி தேவி
மூத றிவாளன் முருகேசை மணந்தும்
செந் தன்மையாளன் செல்லையா தானும்
நங்கை நல்லாளாம் மாணிக்கத் தோடும்
கணபதிக் கிளையோன் கடிமணம் போல
சற்குணன் சண்முகம் தெய்வானை யோடும்
மாண்புறு மடந்தை மாணிக்கம் என்பான்
தாரணி போற்றும் தம்பு லினோடும்
மாநிலம் புகழ வாழ்ந்து வந்தனரே.

அழுதிடும் போது அணைத்துத் துடைத்திட
மூத்தாளா யமை முத்தாச்சி யோடும்
அன்பு பொழிந்து அவலங்கள் தீர்த்திடும்
அண்ணனாம் செம்மல் செல்லையாவுடனும்
தம்பி யென்றழைத்திட வாழ்ந்திடு தங்கம்
தன் திரு தோழிலே சுமந்திடும் சண்முகம்
தங்கையாய் மடியில் தவழ்ந்திட்ட செல்வி
சங்கெனும் தூய மாணிக்கத் தோடும்
நாவலர் புகழும் நன்னியெனும் நல்லாள்
நானிலம் ஏற்றிட வாழ்ந்து வந்தனளே.

ஆழ்கட லூடே அகழ்ந்த முத்தாய்
ஆழமாய் தோண்டி அகழ்ந்த பொன்னாய்
வான்மிசை ஓடும் வண்ண நிலாவாய்
கானிடை காணும் கவினுறு சோலையாய்
வையகம் போற்ற வானவர் வாழ்த்த
நையலார் குலத்தின் தலை மகளாக
வையகமதில் வந்துதித்தனன்
பண்பும் பயனும் பயனுறப் பெற்று
அன்பும் அறிவும் இரண்டறக் கலந்து
கல்வியும் செல்வமும் குறைவிலா நிறைந்து

தானமும் தரும்மும் தளர்விலா தளித்த
காவியத் தலைவனாய் கணபதிப்பிள்ளை
பொற்புடைச் செல்வி பொன்னம் மாவுடன்
இல்லறம் நடத்தி இறைவனை வேண்டி
பெற்றிடு செல்வன் பேரறிவாளன்
வாரி வழங்கி வான்புகழ் கொண்டோன்
சோர்விலா துழைக்கும் சீரிய லாளன்
சீரிய கல்வியில் நற் குருவானோன்
கடல் என துன்பம் அடைந்திட்டாலும்
கல்லென நெஞ்சம் கலங்கிடா தீரோன்
கதிரவேலு எனும் பெயரினைப் பெற்றோனை
கணவனாய் ஏற்று வாழ்வு பெற்றனளே.

வள்ளுவம் காட்டிய வாழ்க்கை நெறியினில்
வானுறை தேவர்கள் போற்றிடு வழியினில்
ஈருடலா யினும் ஓயிரு ராகவே
இன்பமும் துன்பமும் ஒன்றைனக் கொண்டு
அறம்பல புரிந்து அல்லல்கள் களைந்து
வருந்திடு மக்களை விருந்தோ டணைத்து
உற்றமும் சுற்றமும் வாழ்த்திட போற்றிட
சிறப்புறு வாழ்வு பெற்று மகிழ்ந்தனரே.

இல்லற மெனும் நல்லறப் பயனாய்
குணத்திலே குன்றாய் குடும்ப சோதியாய்
முதற்தலை மகனாய் துலங்கி விளங்கிடும்
சற்குண மென்னும் நற்றவப் புதல்வனும்
கற்ற கல்வியால் கடமையில் சிறந்த
கமல சேகரம் அடுத்தவனாக
கலைகளில் மிளிரும் அறிவுடையாளன்
சந்திர ராசா எனும் சற் புத்திரனும்
இத்தனை பேர்க்கும் ஒளி விளக்காக
அன்பினைக் காட்டி அக மகிழ்ந்திடவே

இளையாள் ஒருவளாய் வந்துதித் தனளே
இராஜேஸ்வரி வெனும் இயல்சேர் நல்லாள்
என்றின் நால்வரைப் பெற்று வாழ்ந்தனளே
துள்ளித் திரிந்திடும் பிள்ளைகள் நால்வரும்
நல்வழி நடந்திடக் கல்வியைப் பெற்றிட
மானியம் பதியில் மாண்புற விளங்கிடும்
மெம்மோறியல் கல்லூரி சென்று அடைந்து
சீருடன் சிறப்புடன் கல்வியைப் பெற்றனரே.

ஊரவர் போற்றிட பரீட்சையில் வென்று
மூத்தோனாகிய சற்குண மென்பான்
சுகாதாரப் பகுதியில் பதவியைப் பெற்று
இரத்தம் ஆராயும் பணி புரிந்தனன்

சிறந்து விளங்கிடும் சென்ஜோன்ஸ் கல்லூரி
உயர்வுடன் அளித்த உயர் கல்வியைப் பெற்று
மின்னொளி தந்திடும் மின்சார சபையில்
நற் பெரும் பதவியில் அமர்ந்தனன் கமலம்

கற்றிடு கல்வியால் பெரும்பயன் பெற்று
கூடி உழைத்திடு கூட்டுறவுச் சங்கத்தில்
பதவி பெற்று உயர்ந்தனன் சந்திரனுமே.
கல்வியில் உயர்ந்து பதவியில் அமர்ந்த

புதல்வர் சிறப்பினால் களிப்பினைக் கொண்டு
புத்தகம் கையொடு புறப்படும் பெண்ணை
சித்தம் மகிழ பார்த்துக் களித்து
கணவன் அன்பினால் பூரித் திருந்து

தீவினை கனவிலும் செய்திட எண்ணிடா
கற்புடைத் தெய்வம் பொற்புடைச் செல்வி
நன்னிப் பிள்ளை ஆண்டு பிரம திசவில்
ஈரேழாம் நாளில் இணைந்திடு சனியில்
சித்திரைத் திங்களில் துவாதசி திதியில்
ஆய பூரத்தில் அதிகாலைப் பொழுதில்

ஆயிருர்க் கணவன் ஆ வென்று அரற்றிட
அன்புக் குழந்தைகள் அம்மா என அழுதிட
உடன் பிறந்தோ ரெல்லாம் ‘ஓ’ எனக் கதறிட
மைத்துனர் மைத்துனி மனமது நொந்திட
மாமன் மாமியார் அழுது புலம்பிட

மருகர் யாவரும் மாய்ந்து மலர்கிட
உற்றா ரனைவரும் உளறிப் பதைத்திட
அயலா ரெல்லாம் அன்பை நினைந் தழ
சகத்தினில் வாழ்வு சதமிலை யென அவர்

நினைத்தனள் போல நிமல னடிகளை
எண்ணினளாக விண்ணவர் கொணர்ந்த
பூந் தேரதனில் பொலிவுடன் அமர்ந்து
மண்ணக மறந்து விண்ணகம் விரும்பி
அண்ணல் அடியினை அடைந்தனளாமே.

அன்னாரது ஆன்மா சாந்தியடைவதாக


புலம்பல்கள்

கணவன்

அள்ளிச் சொரிந்திடும் அன்பாலே என் நெஞ்சில்
கொள்ளிடம் புகுந்து நல்வழி காட்டினாய்!
கள்ளமேதும் அறியாத களங்கமில்லா
உன்னுருவம் துள்ளாமல் துடிக்காமல்
துயில் கொண்டிருப்பதேனோ!
பண்பான புத்திரரைப் பால்முகப் புத்திரியை
அன்பான அறிவுடனே! உயர்வாக வளர்த்துவிட்டு
என்பாலே ஒப்படைத்துப் பார்த்திடுக எனச் சொல்லி
எப்பாக மேதி நீ மறைந்தனையோ!

மக்கள் புலம்பல்

மகன் குணம்

அழுகின்ற குரலுக்கு அபயமாய் ஆதரவாய்
தொழுகின்ற தெய்வமாய் தோன்றிய என்னுருவே
எழுகின்ற என்னுணர்வின் இதயமே – இனி
அழுகின்ற போது ஆரம்மா தேற்றிடுவார்!


மகன் கமலம்

படியடா படியென்று படிப்பினிலே உயரவைத்தாய்
பதவி பெற்ற என்னாலே பயனடையமுன்னதாயே
பாதியிலே போய்விட்டாய்! பரிவாகக் கனிவாக
பார்த்தெமை வளர்த்திடற்கு யாரையம்மா விட்டுள்ளாய்


மகன் சந்திரன்

அழைக்கின்ற போதெல்லாம் அலுப்பேதுமில்லாமல்
குழைந் தென்னை எடுத் தேந்தி மடியில் வைத்து
பாலூட்டி வளர்த்தாயே அம்மா – உன்
தாலாட்டை இனி எங்கு கேட்பேனம்மா.


மகள் இராஜேஸ்வரி

அள்ளி அணைத்த உன் கைகள் எங்கே எமை
ஆளாக்க நினைத்த உன் இதயமெங்கே
துள்ளி நானோடிடத் துரத்திய உருவமெங்கே
தூர நின்றே எனை அழைத்த செவ்வாயெங்கே
கள்ளி எனச் செல்லமாய்ப் பகன்ற உன் குரலெங்கே
காதலூட்டும் கனமான சொற்களெங்கே
கிள்ளி எனக்கமுதூட்டிக் கிளிபோல் வளர்த்த நீ எங்கே
ஊரெலாம் தேடியும் உனைக் காண்கிலேனேயம்மா


சகோதரி புலம்பல்

பச்சிளங் குழந்தையாய் என் தோளிலே படுத்து
எச்சிற் படுத்திய என்னரிய தங்கையே உன்
கட்டிலாக் காதலால் கட்டுண்டேன் - இன்று
எட்டி நீ பார்க்காது ஏகிய தெங்கே


அண்ணன் புலம்பல்

செல்லமாய் எனக்கிருந்த சொல்லத்தங்கையே! நீ
சொல்லாமல் கொள்ளாமல் அண்ணனை அரற்றிவிட்டுச்
சென்ற விடம் எவ்விடமோ அவ்விடமே அண்ணனையும்
அழைத்து நீ அரவணைக்க மாட்டாயோ


தம்பி புலம்பல்

ஆசையோடு அன்புடனே “தம்பி என விழித்து
ஆவலுடன் தழுவிடுமு; அழகு முக அக்காவே – நீ
பாசமுடன் பரிவு காட்டும் பண்பான இன்சொல்லெலாம்
ஓசையின்றி ஒடுங்கியதே – ஏனென்று கூறாயோ


மாமன்மார் புலம்பல்

எம்மரிய பெருமகனை ஏற்றுடல் கைப்பிடித்து
வாட்டமுறாவண்ணம் வாழவைத்தாய்
நம் இனிய மருமகனாய் வாழ்ந்துகாட்டி
நாட்டினர்கள் போற்றிடவே வாழ்ந்துபோனாய்
பண்பாகப் பலருக்கும் விருந்தும் ஊட்டி
பல்லோரும் புகழ்திட நீ வாழ்ந்திருந்தாய்
கண்போலக் காத்திடும் உன் உருவமதை
காட்டாமல் மறைந்தெங்கு போனாயோ!


மாமியார் புலம்பல்

வீட்டின் தலைவியாய் விளைநிலத்துத் தானியமாய்
நாட்டின் நல்லாளாய் வீற்றிருந்தாய் வாட்டந்தீர்
மருமகளே எம்மைவிட்டு மாண்டாயோ - இத்தரையில்
எம்மையார் காப்பார் இனி


மைத்துனர்கள் புலம்பல்

சொந்த நன் மச்சாளாய் சுகத்துடன் வாழ்ந்தநாளில்
வந்திடும் துன்பமெல்லாம் அகற்றிட வழிகள் சொன்னாய்
பந்தமாய் பாசம் வைத்து பற்றுடன் வாழ்ந்து விட்டு
முந்தி நீ வாழ்வு முடித்து முந்தியதேனேகூறு


மைத்துனிகள் புலம்பல்

மச்சாள் என அழைப்பதற்காய் இருந்திட்ட
மாதரசி இவளென்று இனிதிருந்தோம் - மாண்புவி
மண் மீது பற்றழித்து மச்சாளை மறந்துவிட்டு
கண்மூடிக் கொண்டது போய்


பெறாமக்கள் புலம்பல்

குஞ்சம்மா என உன்வீடு வந்தால்
கொஞ்சியே அமுத விருந்திடுவாய் - வஞ்சம்சேர்
உலகமுனை வாழவிடா தழித்ததுவே – உங்கள்
கோலமதைக் காண்பதெங்கே கூறு


மருமக்கள் புலம்பல்

அருமை மாமியார் சொரிந்திட்ட அன்புடனே
பெருமையுடன் நாம் இருந்தோம் சிறுமைசேர்
காலனவன் உன் உயிரைக் கவர்ந்திட்டாலும்
ஞாலமது ஒப்புவது பொய்!


சுற்றத்தார் புலம்பல்

அன்புடன் முகமலர்ந்தே அயலில் வாழ் எங்களுக்கு
இன்பமாய் கற்றம் போன்று உதவிகள் பலவும் செய்தாய்
நெஞ்சமெலாம் உன் பண்பாட்டை நினைத்திடும் போது
துன்புற்றுத் துடிக்கின்றோம் துணையினி எமக்காரம்மா.


ஊர்மக்கள் புலம்பல்

ஊருக்கு உத்தமியாய் உள்ளத்தே கபடமின்றி
யாருக்கும் தீங்கு எண்ணூ நல்மனம் கொண்டிருந்தாய்
வாழ்வுக்கு வழிகாட்டி வல்லவளாய் ஒளி வீசி தாழ்விலே
எமைவிட்டு தாண்டிநீ போய்விட்டாயே.


தேற்றம்

மண்ணிலே நடக்கின்ற மாபெரும் கதைகளெலாம்
கண்ணிலே தோன்றிப்பின் கடிதினில் மறைவனவே
எண்ணிடமுடியாதிடும் இயற்கையின் நியதியெலாம்
தோன்றிய இடம் மீண்டும் புக்கலே வாழ்வுஎன்பர்.


தோத்திரப் பாடல்கள்

திருச்சிற்றம்பலம்

விநாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலாற் கூப்புவார் தம் கை.

தேவாரம்

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்குய்ப்பதும்
தேவநான்கினும் மெய்ப்பொருளாவது
நாத நாம நமச்சிவாயவே.

சம்பந்தர்

மலையே வந்து விழினும் மனிதர்தாள்
நினையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவனாகிய ஈசன் தமர்களைக்
கொலை செய்யானைதான் கொன்றிடுகிற்குமே.

அப்பர்

நல்வாயில் செம்தார் நடந்தார் உடுத்தார்
நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
தொடர்ந்தேன் உய்யப் போலதோர் சூழல் சொல்லே.

சுந்தரர்

திருவாசகம்

உற்றாரையான் வேண்டேன்
ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரையாள் வேண்டேன்
கற்பனவும் இனியவையும்
குற்றாலத் தமர்ந் துயறையுங்
கூத்தாவுன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக்
கசிந்துருக வேண்டுவனே.

திருப்பல்லாண்டு

சீருந்திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக் கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்ற தார் பெறுவாருலகில்
ஊருமுலகுங் கழற வுளறி
யுமைமண வாளனுக்காட்
பாரும் விசும்பும் மறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே. -

திருப்புகழ்

கபலனிடத் தனுகாதே காசினியிற் பிறவாதே
சீல அகத்திருள் ஞானத் தேனமுதைத் தருவாயே
மாலயனுக் கரியோனே மாதவரைப் பிரியோனே
நாலுமறைப் பொருளோனே நாதகிரிப் பெருமானே.

அருணகிரிநாதர்

கட்டியனைத்திடும் பெண்டிரு மக்களுங் காலதச்சன்
வெட்டிமுரிக்கு மரம்போற் சரீரத்தை வீழ்த்தி விட்டார்
கொட்டிமுழக்கி யழுவார் மயானங் குறுகியப்பால்
எட்டியடி வைப்பாரோ கச்சி யேகம்பனே.

பட்டினத்தடிகள்