வடமாராட்சியின் புகழ் பெற்ற
வல்லிபுர ஆழ்வார் கோவில்
Vallipuram Kovil - Point Pedro, Jaffna

வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமாராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயம் ஆகும். துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து ஏறக்குறைய 3 கிலோ மீட்டர்கள் தொலைவில் இக்கோவில் உள்ளது.

ஆர்ப்பரிக்கும் கடலொலிகள், வெள்ளை மணற்குன்றுகள் பச்சைப் பசேலென்ற பெருவிருட்சங்கள் என்று இயற்கை அழகு மிளிரும்; ஒரு கோவிலாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் விளங்குகிறது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப் பெற்ற ஒரு புராதன தலமாகும். இவ்வாலயத்தின் மூலமூர்த்தியாக விஷ்ணுவின் சக்தி வாய்ந்த சக்கர ஆயுதமாக விளங்கும் சுதர்சனச் சக்கரம் உள்ளது.

ஈழத்தில் மூலமூர்த்திகளாக படைக்கலங்களை வைத்து வழிபடப்படும் ஆலயங்களே மகிமை பொருந்தியதாகவும், பிரபலமடைந்தவையாகவும் காணப்படுகின்றன. ஈழத்தில் தெற்கே கதிர்காமம், கிழக்கே மண்டுர், வடக்கே செல்வச்சந்நிதி மற்றும் நல்லூர் முருகன் ஆலயங்களின் மூலமூர்த்தியாக வேல் வழிபாடு இடம்பெறுகின்றது. அதே போன்று வடக்கே வடமராட்சியில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் மூல மூர்த்தியாக சக்கரம் காணப்படுவது அவற்றின் மகிமையை எடுத்துக் காட்டுகின்றன.

வல்லிபுரம் - காரணப் பெயர்

யாழ்ப்பாணத்தில் நாகர்களுடைய ஆட்சி கி.பி. 303இலும் லம்பகர்ணர் ஆட்சி 556இலும் முடிவுக்கு வந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். இப்பகுதிகளில் குடியேறிய படை வீரர்களின் ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியபோது வடமறவர்கள் ஆட்சி செய்த இடம் வடமாராட்சி எனவும், தென்மறவர்கள் ஆட்சி செய்த இடம் தென்மராட்சி எனவும் அழைக்கப்பட்டது. ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் கருத்துப்படி தொண்டை நாட்டின் வடக்கில் வசித்த மக்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறியதாகவும் அவர்கள் குடியேறிய பிரதேசத்திற்கு வடமாராட்சி என்று பெயரிட்டதாகவும் தெரிய வருகிறது. அக்குழுவின் தலைவனாக இருந்த வல்லியத்தேவன் என்பவனின் பெயரைக் குறிக்கும் முகமாக இக்கிராமத்திற்கு வல்லிபுரம் என்று பெயரிடப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

வல்லி என்ற சொல்லுக்கு ஆயர்பாடி என்ற ஒரு கருத்தும் புரம் என்றால் கோவில் என்றும் பொருளும் உள்ளது. எனவே வல்லிபுரம் என்பது ஆயர்பாடிக் கோவிலாகவும் கண்ணன் வளர்ந்த இடமாகவும் கருதப்படுகின்றது. சிங்கள பௌத்த திரிபுவாதிகள் கூறுவது போல் “வெலி” என்பது மணலைக் குறிப்பதால் இது ஒரு சிங்களப் பிரதேசம் என நிறுவ முயல்வது முட்டாள்தனமான ஒரு இனவாதமாகும். ஆதனால்தான் மணலாறு என்ற தூய தமிழ்ப் பெயரை வெலிஓயா எனப் பெயர்மாற்றி தங்களுடைய பதிவேடுகளில் குறித்து வைத்திருப்பதானது பௌத்த சிங்கள மேலாதிக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. இது தமிழர்களின் அரசிருக்கை ஒன்று இருந்தமைக்கான பல தொல்லியல் வரலாற்று ஆதாரங்கள் இங்கே கிடைக்கப்பெற்றுள்ளன என்பதை பௌத்த சிங்களப் பேரினவாத ஆய்வாளர்கள் மறைக்க முயல்கின்றனர்.

மகாத்மா காந்திகளின் வடமராட்சி விஜயததை நினைவு கூரும் வகையில் ஆலய இராஜகோபுரத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வல்வெட்டி;ததுறை சிவன் கோயிலின் தெற்குப்புற இராஜ கோபுரத்திலும் இராட்டினம் சுற்றும் காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியான கர்ணபரம்பரைக் கதை

தற்போது இக்கோவில் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியது. கற்கோவளத்தைச் சேர்ந்த கடலோடிகள் அந்த மச்சத்தைப் பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை.

இவ்வேளையில் வராத்துப் பளையைச் சேர்ந்த நாகசாபம் பெற்ற 'வல்லி' எனப்படும் வல்லி நாச்சி பயபக்தியுடன் தவமிருந்தார். அவர் கனவில் தோன்றிய பகவான் மறுநாள் குறித்த கற்கோவளம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு வருமாறு பணித்தார்.

மறு நாள் காலை அங்கு சென்று கரையில் உட்கார்ந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்தார். அப்போது அந்த மச்சம் கடலில் இருந்து அவர் மடியில் துள்ளிக் குதித்து அழகிய குழந்தையாக மாறியது. கண்ணன் உதித்தான் என ஆரவாரம் செய்த அடியவர்கள் குழந்தையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றனர். களைப்புற்ற மக்கள் ஓர் இடத்தில் பல்லக்கை வைத்து இளைப்பாறினர்.

பின்னர் பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தபோது பல்லக்கு மாயமாக மறைந்தது.அந்த இடத்தில் சக்கரம் ஒன்று தோன்றியது. எனவே அம்மக்கள் அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை அமைத்து அச்சக்கரத்தை வழிபடத் தொடங்கினார்கள்.

இவ்வாலயத்தின் மூலவர்களாக கற்கோவளம் வராத்துப்பளையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களே இருப்பதால், கடல் தீர்த்தத்தின் பொழுது, மூலமூர்த்தியையும், ஆஞ்சநேயர் விக்கிரகத்தையும் "கோவிந்தா, கோவிந்தா” என்ற திருநாமத்தை உரத்த தொனியில் உச்சரித்துக் காவிச் செல்வது, தொடக்கம் அனைத்துப் பணிகளும் அவர்களே முன்னின்று செய்கின்றனர்.

குருக்கட்டு சித்தி விநாயகர் வழிபாடு:

வைஷ்ணவ ஆலயங்களிலும் அக்காலங்களில் பிள்ளையாருக்கே முதலிடம் கொடுக்கப்பட்டது போன்றே இங்கும் ஆலமரம் குளம் நெல் வயல்கள் என இயற்கைச் சூழலில் அமைந்துள்ள குருக்கட்டு சித்தி விநாயகருக்குப் பூசை செய்த பின்னர் வல்லிபுர ஆழ்வாருக்கு பூசை செய்வது வழக்கமாகும்.

இதனால், வல்லிபுர ஆழ்வார் வெளிவீதி வரும் நாள் அன்று மூலமூர்த்தி இவ் வினாயகர் ஆலயத்திற்குச் சென்று பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே வீதிவலம் வரத் தொடங்குகின்றார்.

வருடாந்த மகோற்சவமும், விசேட பூசைகளும்

புரட்டாதி மாதம் பௌர்ணமித் திதியில் தீர்த்த உற்சவம் நடைபெறக் கூடிய வகையில் 15 நாட்கள் திருவிழா நடைபெறும். கடலாடு தீர்த்த உற்சவத்திற்கு அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நடைபெறும்.

இது பிள்ளையார் கோயிலுடன் சேர்ந்திருக்கும் குளத்தில் நடைபெறும்.. இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி மிக விமர்சையாகக் கொண்டாடப்படும். நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் திருப்பாவை வழிபாடும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு சிறப்பான நாளாகும்.

அன்றைய தினம் பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதும், பொங்கல் வைத்துப் படைப்பதுமாக கோயில் சூழல் கலகலப்பாகவும், பக்தி மயமாகவும் இருக்கும்.

நாயன்மார்களினாலும், ஆழ்வார்களினாலும் பாடல் பெற்ற பலதலங்களும் புராதன ஆலயங்களும் காணப்படுவதே ஈழத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுள்ளே மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிறந்த தலங்களில் ஒன்றாகவே வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம் அமைந்துள்ளது.

மூர்த்தியருளும் முறைசேர் தலநலமும்
தீர்த்தத் திருநிறைவும் சேருமருட் – கீர்த்திமிகு
நல்லவோர் ஆலயத்தை நாடி நான் போற்றுதற்
கல்லேனின் றோனே னறி

என்று கருடாழ்வார் தூது விஸ்ணு ஆலயத்தின் தலமகிமையைப் பாடுகின்றது.

ஈழத்தில் இருக்கும் வைணவ ஆலயங்களெல்லாம் சைவமுறைப்படி திருநீறு சந்தனம் வழங்க வல்லிபுரம் ஆழ்வார் திருத்தலத்தில் மட்டும் சிறப்பாய் விபூதியும் வைணவ பாரம்பரியமாக திருநாமமும் வழங்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்.

ஈழத்திலும் தமிழகத்திலும் உள்ள விஸ்ணு ஆலயங்களில் மூலமூர்த்தி நின்ற கோலத்திலோ, அல்லது அமர்ந்த கோலத்திலோ அல்லது சயனிக்கும் கோலத்திலோ காணப்படும். ஆனால் வல்லிபுரத்திலோ சுதர்சன சக்கரமே மூலமுர்த்தியாக உள்ளது.

இத்தலத்தை பற்றிய வரலாற்றை தட்சிண கைலாச புராணம், தட்சிண கைலாச மான்மியம் என்பவற்றிலும் காணலாம். சிங்கள மொழியில் 14ம் நூற்றாண்டில் எழுந்த தூது இலக்கியங்களிலும் (சந்தேச காவியங்கள்) இத்தலமகிமை பேசப்படுகின்றது. குறிப்பாக "கோகிலவு சந்தேசம்" பொன்னாலையில் இருக்கின்ற வரதராஜப் பெருமாளையும், வல்லிபுரம் ஆழ்வாரைப்பற்றியும் பாடியுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திருத்தலத்தின் மகிமையானது இதன் அருகில் அமைந்துள்ள சமாதியால் பெருமை பெறும்.

இவ்வாலயத்தின் கடல் தீர்த்தத்தைப பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல இலட்சக் கணக்கான மக்கள் வந்து “கோவிந்தா…கோவிந்தா” என்று உணர்வு பூர்வமாக வழிபடுவது வேறு எந்த ஒரு ஆலயத்திலும் பார்க்க முடியாத ஒரு அற்புதம். சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரம் வரை மணல் குன்றுகளின் ஊடாக மூலமூர்த்தியைக் காவிச் செல்வதும், அதற்கு முன்னால் ஆஞ்சநேயரைத் தூக்கியபடி விரைவாகச் சென்று தீர்த்தமாடி கால் நடையாகவே மீண்டும் திரும்பி வருவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

 


 


 


 


 


வல்லிபுர ஆழ்வார் கோவில்

நன்றி IBC TV காணொளி.