யாழ் மாவட்டத்தில் பரந்ததொரு நிலப்பரப்பை உள்ளடக்கியதும், தனித்துவமான பல பண்புகளைக் கொண்டதுமாக தென்மராட்சிப் பிரதேசம் உள்ளது. இம் மாவட்டத்தின் பொருளாதாரத்தில் கணிசமான பங்களிப்பினை வழங்குவதாக இப்பிரதேசம் உள்ளது. நெல், பழவகை, தென்னை என்பன அதிகளவில் இங்கு செய்கை பண்ணப்படுகிறது. வானுயர்ந்த மரங்களும், வளமுடைய நிலங்களும், நீர் நிலைகளும், வயல் வெளிப்பயிர்களும் என பேரெழில் பெற்று விளங்குகின்றது இப் பிரதேசம்.
தென்மராட்சிப் பிரதேச செயலகமானது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது. இதன் பிரிவு எல்லைகளாக வடக்கே தொண்டைமானாறு கடல் நீரேரியும் கரவெட்டி பிரதேச செயலகமும், கிழக்கே பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும், தெற்கே யாழ்குடா கடல் நீரேரியும் பூநகரி பிரதேச செயலகமும், மேற்கே நாவற்குழி- செம்மணிப் பாலமும் உப்பாறு கடல் நீரேரியும் காணப்படுகிறது.
தென்மராட்சிப் பிரதேசம் 232.19 சதுரKm பரப்பைக் கொண்டு யாழ் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரதேச செயலகமாக காணப்படுகிறது. அதாவது மாவட்டத்தின் 22.5% நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டதாக உள்ளது. தென்மராட்சி பௌதீக ரீதியாக சமதரைப் பாங்கானதாக காணப்படுவதுடன் பெரும்பாலான பகுதிகளில் மணல் மண் மேற்பரப்பாக காணப்படுகிறது. இங்கு ஆறுகளோ மலைகளோ காணப்படாத போதிலும் பற்றைக் காடுகளும் சிறுகுளங்களும் காணப்படுகின்றன. யாழ் குடாநாட்டின் பாறை அமைப்பிற்கேற்றவாறு இப்பிரதேசத்தில் தரைக்கீழ் நீர்வளமே உள்ளது. எனினும் சில பகுதிகளில் கனியங்களின் செறிவு காரணமாக நீர் பழுப்பு நிறங்கொண்டதாகவும் அடத்தி கூடியதாகவும் உள்ளது. இப்பிரதேசத்தின் சில பகுதிகளில் செம்மண் தொகுதியும் காணப்படுகிறது.
தென்மராட்சிப் பிரதேச செயலகமானது 60 கிராம சேவகர் பிரிவுகளையும் 130 கிராமங்களையும் கொண்டமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசம் சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை என்ற இரு உள்ளூராட்சி அலகுகளை உள்ளடக்கி உள்ளது. இதில் சாவகச்சேரி நகரசபை 11 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கி 31.29 சதுரKm பரப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. மிகுதி 49 கிராமசேவையாளர் பிரிவுகளைக் கொண்ட 200.90சதுரKm பரப்பு சாவகச்சேரி பிரதேச சபைக்குள் அடங்குகிறது. தென்மராட்சிப் பிரதேச செயலகம் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்குள் அடங்குகிறது.
தென்மராட்சிப் பிரதேசமானது இலங்கையின் உலர் வயத்தில் காணப்படுகிறது. அத்துடன் நவம்பர் தொடக்கம் ஜனவரி வரையான மாதங்களில் வடகிழக்குப் பருவ மழைவீழ்ச்சியினைப் பெற்றுக் கொள்கிறது. இம் மழைவீழ்ச்சியானது நெற்பயிர்ச் செய்கைக்கும் நிலத்தடி நீர் சேகரிப்பிற்கும் உதவியாக உள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் நீர் ஏனைய பருவகாலங்களில் கிணறுகளின் மூலம் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
தென்மராட்சிப் பிரதேசமானது யாழ் மாவட்ட விவசாய உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. இதனால் யாழ் மாவட்டத்தின் உணவுக் களஞ்சியம் என்றும் அழைக்கப்படுகிறது. தென்மராட்சிப் பிரதேசமானது மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் என்பவற்றிற்குப் பெயர் பெற்ற இடமாக விளங்குகிறது. இங்கு தென்னை வளமும் காணப்படுகிறது. அத்துடன் கடந்த கால யுத்தத்தினால் பெருமளவு தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளன. இங்கு பெருமளவு நெல் சாகுபடி செய்யப்படுவதுடன் தானியங்களும் மரக்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கோடை காலங்களில் கிணற்று நீரைப்பயன்படுத்தி பயிற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
தென்மராட்சிப் பிரதேசமானது யாழ் மாவட்டத்தினை ஏனைய மாவட்டங்களுடன் இணைக்கும் A9 வீதியினையும் உள்ளடக்குகிறது. அத்துடன் கொடிகாமம்- பருத்தித்துறை வீதி, சாவகச்சேரி- பருத்தித்துறை வீதி, மீசாலை- புத்தூர்ச்சந்தி வீதி, கேரதீவு ஊடாக சாவகச்சேரி-பூநகரி வீதி ஆகிய பிரதான வீதிகளையும் கொண்டுள்ளது.
தென்மராட்சிப் பிரதேசத்தில் வரலாற்றுத் தொல்லியற் கட்டடங்களோ அல்லது புதைபொருட் சின்னங்களோ குறிப்பிடத்தக்களவிற்கு கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் பல இப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளன.
கி.பி 1242-ல் வட இலங்கையில் சிம்மாசனமேறிய கலிங்கச்சக்கரவர்த்தி 1248-ல் யாழ்ப்பாண நகரினை உருவாக்கி அங்கு தனது இராசதானியை அமைத்ததாக கூறப்படுகிறது. இவ் இராச்சியத்தின் முதல் மன்னனான விஜயகாலிங்க சூரியன் தென்னிந்தியாவிலிருந்து மக்களை அழைத்து வந்து யாழ்ப்பாணத்தில் குடியேற்றியதாக யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை போன்ற சரித்திர நூல்கள் கூறுகின்றன. திருநெல்வேலி, புலோலி, இணுவில் என பல இடங்களில் இவ்வாறான குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளதோடு தென்மராட்சியின் கோயிலாக் கண்டி பகுதியிலும் இவ்வாறான ஒரு குடியேற்றம் நிகழ்ந்துள்ளது. தென்னிந்தியாவின் புல்லூரைச் சோ்ந்த தேவராயேந்திரன் கோயிலாக்கண்டியில் தனது அடிமை குடிமைகளுடன் குடியேறியதாக மேற்படி நூல்கள் கூறுகின்றன.
கி.பி 1247-ல் தென்னிலங்கையை நோக்கிப் படையெடுத்த சந்திரபானு என்ற சாவகன் (யாவா தேசத்தைச் சோ்ந்தவன்) அங்கு தோல்வி கண்டதால் வட இலங்கை நோக்கிப் படையெடுத்து காலிங்கச் சக்கரவர்த்தியின் அரியணையைக் கவர்ந்து கொண்டான். அவனோடு வந்தவர்கள் குடியேறிய பகுதி சாவக்கோட்டை, சாவகச்சேரி, சாவகன்சீமா என வழங்கப்படலாயிற்று.
கி.பி1450-ல் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றும் நோக்குடன் 6ம் பராக்கிரமபாகு மன்னன் சப்புமல்குமரனை(செண்பகப்பெருமாள்) பெரும்படையுடன் வட இலங்கைக்கு அனுப்பியிருந்தான். இவ்வாறு சப்புமல்குமரன் படையெடுத்து வந்த போது, சிங்களப்படைக்கும் தமிழ் படைக்குமிடையில், வட இலங்கையில் நடந்த முதலாவது யுத்தம் சாவகன்கோட்டையில்(சாவகச்சேரி) நிகழ்ந்துள்ளது.
உக்கிரசிங்கனிடம் கருணாகரத்தொண்டமான், உடுப்பிட்டியிலுள்ள கரணவாய், மட்டுவிலில் உள்ள வெள்ளப்பரவைக்கடல்களில் விளைகின்ற உப்பைக் கேட்டதாக வரலாறு கூறுகின்றது. இவ் உப்பை கொண்டு செல்வதற்காகவே தொண்டமனாறு வெட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சங்கிலி மன்னன் உண்டாக்கிய குழப்பத்தால் அப்போதைய யாழ்ப்பாண இராச்சிய மன்னன் பரராச சேகரனை சோழமன்னன் சிறை எடுத்தபோது அம் மன்னனை மீட்ட பரநிரூபசிங்கம் என்ற வீரனுக்கு ஏழு ஊர்களை அம்மன்னன் பரிசளித்திருந்தான். அந்த ஏழு ஊர்களில் தென்மராட்சிப்பகுதியின் கச்சாயும் உள்ளடங்குகிறது. சாவகச்சேரி வாரிவணேஸ்வரம் சோழர் காலத்துடன் தொடர்புபட்டுக் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இவ்வாறாக பல வரலாற்று நிகழ்வுகள் இப்பிரதேசத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது.
http://www.thenmaradchchi.ds.gov.lk
சாவகச்சேரி நகரசபை
சாவகச்சேரி தொகுதி
சாவகச்சேரி D.S. பிரிவு
சாவகச்சேரி நகரசபை
வட்டாரம் | G.S.பிரிவு | ||
---|---|---|---|
1 | சாவகச்சேரி | J300 | சாவகச்சேரி நகர் |
2 | மட்டுவில் | J301 | கோவில்குடியிருப்பு |
3 | நுணாவில் | J302 | சங்கத்தானை |
J303 | சாவகச்சேரி வடக்கு | ||
J304 | மட்டுவில் | ||
J305 | கல்வயல் | ||
J306 | நுணாவில் கிழக்கு | ||
J307 | நுணாவில் மத்தி | ||
J308 | நுணாவில் மேற்கு |
சாவகச்சேரி பிரதேசசபை
சாவகச்சேரி தொகுதி
சாவகச்சேரி D.S. பிரிவு
சாவகச்சேரி பிரதேசசபை
வட்டாரம் | G.S.பிரிவு | ||
---|---|---|---|
1 | வரணி | J339 | வரணி வடக்கு |
J340 | மாசேரி | ||
J341 | இடைக்குறிச்சி | ||
2 | நாவற்காடு கரம்பை | J337 | குடமியான் |
J338 | நாவற்காடு | ||
J342 | கரம்பைக்குறிச்சி | ||
J343 | வரணி-இயத்தலை | ||
3 | மந்துவில் | J344 | தாவளை-இயத்தலை |
J345 | மந்துவில் கிழக்கு | ||
J346 | மந்துவில் மேற்கு | ||
J347 | மந்துவில் வடக்கு | ||
4 | சரசாலை | J316 | சரசாலை தெற்கு |
J317 | சரசாலை வடக்கு | ||
5 | மட்டுவில் வடக்கு | J313 | மட்டுவில் வடக்கு |
J314 | மட்டுவில் கிழக்கு | ||
6 | மட்டுவில் சந்திரபுரம் | J312 | மட்டுவில் மத்தி |
J315 | சந்திரபுரம் | ||
7 | கைதடி வடக்கு | J288 | கைதடி வடக்கு |
J289 | கைதடி கிழக்கு | ||
J290 | கைதடி மத்தி | ||
8 | கைதடி தெற்கு | J291 | கைதடி தெற்கு |
J292 | கைதடி தென்கிழக்கு | ||
J293 | கைதடி மேற்கு | ||
9 | மட்டுவில் நுணாவில் | J309 | கைதடி நுணாவில் |
J310 | தென்மட்டுவில் | ||
J311 | மட்டுவில் நுணாவில் | ||
10 | மீசாலை ராமாவில் | J318 | மீசாலை கிழக்கு |
J320 | ராமாவில் | ||
J321 | மீசாலை வடக்கு | ||
11 | கொடிகாமம் | J326 | கொடிகாமம் வடக்கு |
J327 | கொடிகாமம் மத்தி | ||
J328 | கொடிகாமம் தெற்கு | ||
12 | உசன் மிருசுவில் | J329 | உசன் |
J336 | மிருசுவில் தெற்கு | ||
J335 | மிருசுவில் வடக்கு | ||
13 | உசன் மிருசுவில் | J329 | உசன் |
J336 | மிருசுவில் தெற்கு | ||
J335 | மிருசுவில் வடக்கு | ||
13 | கரம்பகம் எழுதுமட்டுவாள் | J330 | கரம்பகம் |
J333 | எழுதுமட்டுவாள் தெற்கு | ||
J334 | எழுதுமட்டுவாள் வடக்கு | ||
14 | விடத்தல்பளை பாலாவி | J325 | பாலாவி |
J331 | விடத்தல்பளை | ||
J332 | கெற்பெலி | ||
15 | கச்சாய் அல்லாரை | J322 | அல்லாரை |
J323 | வெல்லம்போக்கடி | ||
J324 | கச்சாய் | ||
16 | தனங்கிளப்பு | J297 | கைதடி நாவற்குளி |
J298 | மறவன்புலவு | ||
J299 | தனங்கிளப்பு | ||
17 | நாவற்குழி | J294 | நாவற்குளி மேற்கு |
J295 | நாவற்குழி கிழக்கு | ||
J296 | கோயிலாக்கண்டி |